செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 1,175 ஏக்கர் நிலத்தை கேட்டு ஆளவந்தாரின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,175 ஏக்கர் நிலத்தை கேட்டு ஆளவந்தாரின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் கோதண்டராமன், கஸ்தூரி, கவுசல்யா, கிருஷ்ணவேணி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் செங்கல்பட்டு நெமிலியை சேர்ந்த கொடை வள்ளல் ஆளந்தவந்தாரின் சட்டப்படியான வாரிசுகள் ஆவோம். ஆளவந்தார் திருமணம் செய்துகொள்ளாதவர் என்பதால், அவர் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் நிர்வகிக்கும் வாரிசாக தனது சகோதரரின் மகன் முத்துகிருஷ்ணனை நியமித்து 1914-ம் ஆண்டு உயில் எழுதி வைத்தார்.
1936-ம் ஆண்டு முத்துகிருஷ்ணன் இறந்தபின்னர், அவரது இரு மகன்கள் லோகநாத நாயக்கர், ஜெயராமா நாயக்கர் ஆகியோர் வாரிசுகள் ஆகினர். நாங்கள் 4 பேரும் இவர்களது வாரிசுகள் ஆவோம்.
தற்போது எங்கள் தந்தைகள் லோகநாத நாயக்கர், ஜெயராமா நாயக்கர் இறந்து விட்டனர். எனவே, ஆளவந்தாருக்கு சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நஞ்சை, புஞ்சை நிலங்களாக 1,175 ஏக்கர் நிலம் உள்ளன. இந்த நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் வசம் தற்போது உள்ளது.
இதில் ஒரு பகுதியான நெமிலியில் உள்ள நிலத்தில்தான் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே, 1,175 ஏக்கர் நிலத்தை எங்களிடம் ஒப்படைக்கக்கோரி அறநிலையத்துறைக்கு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி கொடுத்த மனுவை பரிசீலிக்கவும், நிலத்தை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி கொடுத்த மனுவில் கோதண்டராமனும், சவரிமுத்து என்பவரும் சட்டப்படியான வாரிசுதாரர்கள். எனவே, 1914-ம் ஆண்டு உயிலின்படி தங்களிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு கடந்த ஆண்டு மே 7-ந்தேதி பதில் அளித்த நெமிலி அருள்மிகு ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளை செயல் அதிகாரி, கோர்ட்டு உத்தரவின்படி, இந்த சொத்துகள் அனைத்தும் அறக்கட்டளை வசம் உள்ளது. இந்த அறக்கட்டளை, அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகிறது. எனவே, இந்த சொத்துகளை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.
தகுந்த விளக்கத்தை அதிகாரி வழங்கிய பின்னர், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். செயல் அதிகாரி அளித்துள்ள பதிலை எதிர்த்து சட்டப்படி வழக்கு தொடர்ந்து மனுதாரர்கள் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.