போரில் வீர மரணம் அடைந்த பெண் படை தளபதியின் நினைவு கல் கண்டெடுப்பு

பேரணாம்பட்டு அருகே போரில் வீர மரணம் அடைந்த பெண் தளபதியின் நினைவு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-09 18:03 GMT

நினைவு கல்

பேரணாம்பட்டு பகுதியில் குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜெயவேல் மற்றும் வரலாற்று பிரிவு மாணவர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு நினைவு கல் புடைப்பு சிற்பங்கள், ஆநிரை கல் ஆகியனவற்றை கண்டெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் போரில் ஈடுப்பட்டுள்ளதை நினைவு கூறும் வகையில் ஒரு பெண் படை தளபதியின் நினைவு கல் புடைப்பு சிற்பத்தை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜெயவேல் கூறியதாவது:-

விஜயநகர பேரரசு

பேரணாம்பட்டு அருகே உள்ள சின்னதாமல் ஊராட்சிக்குட்பட்ட சப் ஸ்டேஷன் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்புடன் கூடிய விவசாய நிலத்தில் நெற்பயிர்களுக்கு நடுவில் 17-ம் நூற்றாண்டு பாளையக்கார காலத்தின் பெண் நினைவு கல் புடைப்பு சிற்பம் சுமார் 4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்டது கண்டெடுக்கப்பட்டுள்ளது. விஜய நகர பேரரசானது 14-ம் நூற்றாண்டில் போரில் தமிழகத்தில் வேலூர், மதுரை, தஞ்சை, செஞ்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கைப்பற்றினர்.

அந்த பகுதிகளை நிர்வாகம் செய்வதற்காக நாய்க்கர்களை நியமித்துள்ளனர். அவர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து நிர்வாகம் செய்து வந்துள்ளனர். அதில் ஒரு பாளையம் வேலூர் பாளையம் என கூறப்படுகிறது. இந்த புடைப்பு சிற்பத்தில் 7 வரிகளில் நவீன தமிழ் சொற்களானது சிதைவுற்று காணப்படுகிறது. அதனை முழுமையாக படித்து அறிய முடியவில்லை. பொதுவாக படைத் தளபதியான ஆண்கள் போரில் வீர மரணம் அடைந்தால் நினைவு கல் புடைப்பு சிற்பங்கள் ஏற்படுத்தப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெண் படை தளபதியின் நினைவு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெண் தளபதி

இந்த பெண் படை தளபதி நினைவு கல்லில் எதிரியின் ஆயுதத்தை தடுப்பதற்கான கேடயத்தை இடது புற கையில் ஏந்தியவாறும், வலதுப்புற கையில் எதிரியை எந்நேரத்திலும் குத்துவதற்கு தயாரான நிலையிலும், மேலும் இடுப்பில் குத்து வாளுடன், ஒட்டு மொத்த சிற்பத்தில் போரில் வென்று கம்பீரமாக நிற்பது போன்று மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு நிகராக போரில் பெண்கள் பங்கேற்று ஈடுப்பட்டுள்ளதையும், போரில் வெற்றி பெற்று வீர மரணம் அடைந்திருப்பதை வடிவமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை இதன் வாயிலாக அறிய முடிகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்