ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைப்பு

சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-07-17 23:55 GMT

சென்னை,

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14-ந் தேதி சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருதயத்தின் முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 15-ந் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.

இருதய அறுவை சிகிச்சை

இதனையடுத்து கடந்த மாதம் 21-ந் தேதி செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து உடல் நலம் தேறி வந்த செந்தில் பாலாஜி கடந்த 24-ந் தேதியன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர், அவர் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழுவினரின் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார். அதேநேரத்தில் அவருடைய நீதிமன்ற காவல் 26-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்'

இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் கடந்த 4-ந் தேதியன்று மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த 14-ந் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என்றும், செந்தில் பாலாஜியை கைது செய்தது மற்றும் நீதிமன்ற காவல் ஆகியவை சட்டப்பூர்வமானது என்றும் நீதிபதி தீர்ப்பு அளித்திருந்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடல் நிலையில் வேகமாக முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் நேற்று மாலை 4.41 மணியளவில் காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைப்பு

பின்னர், போலீஸ் வாகனங்கள் முன்னும், பின்னும் அணிவகுத்து செல்ல பலத்த பாதுகாப்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார்.

சரியாக 5.31 மணிக்கு செந்தில் பாலாஜி சென்ற 108 ஆம்புலன்ஸ் புழல் சிறைச்சாலையை அடைந்தது.

மருத்துவ பரிசோதனை

அப்போது சிறைச்சாலை முன்பு மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் நாராயணன் தலைமையில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரி டாக்டர்கள் செந்தில் பாலாஜியை முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்தனர். இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதால் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் வைத்து அவரை டாக்டர்கள் குழு கண்காணிக்க உள்ளது.

உடல்நலம் சற்று தேறிய பின்னர் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளுக்கான முதல் வகுப்பு அறைக்கு மாற்றப்பட உள்ளார். முதல் வகுப்பு அறையில் தனி படுக்கை, தனி கழிவறை மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கப்படும். செந்தில் பாலாஜி நோயாளியாக வந்ததால், அவரை சிறை டாக்டர்கள் 24 மணி நேரமும் உன்னிப்பாக கண்காணிப்பார்கள் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 33 நாட்களுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்