புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கல்
புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.;
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமை பெண் திட்டம் தொடக்க விழா பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் முதற் கட்டமாக 446 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை செலுத்தப்பட்ட வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தனியார் பள்ளியில் ஆ.டி.இ-யின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1,371 மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை செய்து 446 மாணவிகளுக்கு ரூ.1,000 செலுத்தப்பட்ட வங்கி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 571 மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2-ம் கட்டமாக வர பெற்றுள்ள 865 மனுக்களை விசாரிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.