அரசு கலை கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை

ரிஷிவந்தியம் அரசு கலை கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது

Update: 2023-07-02 18:45 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த மே 29-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் காலியாக உள்ள புள்ளியியல், கணினி அறிவியல், வணிகவியல் மற்றும் பொருளியல், தமிழ் இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்காத மாணவர்களும், ஏற்கனவே கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கும் நேரடி மாணவர் சேர்க்கை கல்லூரியில் நடைபெற உள்ளது.

அதன்படி நாளை(செவ்வாய்க்கிழமை) பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், நாளை மறுநாள்(புதன்கிழமை) மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், வருகிற 6-ந் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கும், 7-ந் தேதி அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. சேர்க்கையில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச்சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ் ஆகியவற்றோடு பெற்றோருடன் வந்து கலந்துகொள்ள வேண்டும். மேற்கண்டவாறு கல்லூரி முதல்வர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்