டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு சாவு

நங்கவள்ளி அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-16 20:08 GMT

மேச்சேரி:-

நங்கவள்ளி அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

டிப்ளமோ மாணவர்

நங்கவள்ளி அருகே விருதாசம்பட்டி வெள்ளை கரடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் நிர்மல்ராஜ் (வயது 19). இவர் மேச்சேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.

மாணவரின் மருத்துவ செலவிற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுதாகரிடம் ரூ.65 ஆயிரம் கடனாக அவரது பெற்றோர் வாங்கி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 ஆயிரத்தை வட்டியுடன் சேர்த்து கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள ரூ.15 ஆயிரத்தை கொரோனா காலத்தில் வேலை இல்லாததால் மாணவரின் குடும்பத்தினர் கொடுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதாகர், அவருடைய தாயார் சரஸ்வதி ஆகிய இருவரும் நிர்மல் ராஜ் வீட்டிற்கு சென்று தகாதவார்த்தைகளால் திட்டி உங்களிடம் பணத்தை எத்தனை முறை கேட்பது பணத்தை கொடு இல்லையென்றால் ஆட்டை பிடித்து கொடு போகிறோம் என அவர்கள் கூறி உள்ளனர்.

தற்கொலை

இதையடுத்து மாணவர் நிர்மல்ராஜ் ஆசையாக, ஆசையாக வளர்த்து வந்த ஆட்டை சரஸ்வதி, சுதாகர் பிடிக்க சென்றுள்ளார். அதற்கு நிர்மல் ராஜ், தனது பெற்றோரிடம் பணம் கொடுத்தால் அவர்களிடம். வாங்கி கொள்ளுங்கள், நான் வளர்க்கும் ஆட்டை எதற்கு பிடிக்கிறீங்க என கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் இருவரும், மாணவரின் பெற்றோரை பற்றி தரக்குறைவாக பேசியதாகவும், பணம் கொடுப்பதற்கு வழியில்லை என்றால் சாவுடா என்று திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த நிர்மல் ராஜ், அங்கிருந்த ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்த வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் அங்கிருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனிடையே மாணவரின் தாயார் மகன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டதை கண்டு கதறி அழுதார். உடனே அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய மாணவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து தனது மகனின் தற்கொலைக்கு காரணமான சுதாகர், அவருடைய தாயார் மீது நடவடிக்கை எடுக்குமாறு நங்கவள்ளி போலீசில் மாணவரின் தாயார் புகார் கொடுத்தார்.

வாலிபர் கைது

அதன்பேரில் நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை (28) கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சரஸ்வதியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நங்கவள்ளி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்