'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-08 19:22 GMT

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொக்கனாரேந்தல் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் உள்ளனர். ஆனால் காவிரி கூட்டு குடிநீர் இந்த கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் மக்கள் குடிநீர் எடுக்க சுமார் 2 கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. எனவே உடைந்த குழாயை சீரமைக்கவும், முறையாக குடிநீர் கிடைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைத்தியநாதன், முதுகுளத்தூர்.

ரவுண்டானா அமைக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிழக்குகடற்கரை சாலை பழங்கோட்டை நான்குமுனை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே இந்த நான்கு முனை சந்திப்பில் ரவுண்டானா அமைத்து சிக்னல் விளக்குகள் ஏற்படுத்தி விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

அஹமதுகான், திருப்பாலைக்குடி.

சேதமடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா?

முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் பழமையான கட்டிடத்தில் செயல்படுகிறது. மழை பெய்தால் மேற்கூரையிலிருந்து மழைநீர் உள்ளே வருவதால் அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

நடராஜன், முதுகுளத்தூர்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநாவுக்கரசு, தொண்டி.

பஸ் வசதி தேவை

ராமநாதபுரம் பஸ் நிலையம் பகுதியில் இருந்து வேதாளை வழியாக பாம்பனுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இரண்டு பஸ்கள் மாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு பயணிகளின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடம் வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்பு, வேதாளை.

Tags:    

மேலும் செய்திகள்