தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-02-12 19:20 GMT

தார் சாலை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், நடையனூர் அருகே பூலாங்காடு பகுதியில் இருந்து கரைப்பாளையம் தங்காயி அம்மன் கோவில் செல்லும் சாலையில் பாதி வரை மண் சாலையாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது. இந்த மண் சாலை வழியாக கரைப்பாளையம் பகுதியில் உள்ள கோவிலுக்கும், மற்ற பகுதிகளுக்கும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த மண் சாலை வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆற்றில் முளைத்த கருவேல மரங்கள்

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே கட்டிப்பாளையம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்தும், துணிகளை துவைத்தும் வருகின்றனர். விவசாயிகள் ஏராளமான கால்நடைகளை காவிரி ஆற்று பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று கால்நடைகள் மேய்ந்த பிறகு கால்நடைகளை ஓட்டி செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முடித்துள்ளது. இந்த சீமைக்கருவேல மரத்தில் உள்ள காய்கள் கீழே விழுந்து அதை கால்நடைகள் சாப்பிட்டால் கால்நடைகளுக்கு மலட்டு தன்மை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதேபோல் அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்