தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-02-08 17:52 GMT

குடும்ப அட்டைதாரர்கள் அவதி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்க 5 ரேஷன் கடையில் உள்ளன. கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு கோதுமை சரிவர வழங்கப்படுவது இல்லை. பொதுமக்கள் சென்று கேட்டால் ரேஷன் கடைக்கு கோதுமை வரத்து குறைந்துவிட்டது என்று கூறுகிறார்கள். அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஏழை -எளியவர்கள் தான் பெரும்பாலும் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் தொல்லை

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள பொதுமக்களை கடிக்க வருவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஒருவழி பாதையான தார்சாலை

கரூர் மாவட்டம் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இருந்து மோதுகாடு பகுதிக்கு செல்வதற்கு தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார்சாலையின் இருபுறமும் மண்கள் கொட்டப்பட்டும், பல்வேறு செடி- கொடிகள் முளைத்தும் உள்ளதால் தார் சாலையின் அகலம் குறைந்துள்ளது. இதனால் ஒரு வழி பாதைபோல் இந்த தார் சாலை காட்சி அளிக்கிறது. விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு இடுபொருட்களையும், விளைந்த பின் விளை பொருட்களையும் கொண்டு வரும்போது மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் மோதுக்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு விசேஷங்களுக்கு வருபவர்களும் தடுமாறி செல்கின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து அகலம் குறைவாக உள்ள தார் சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள மண்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சியில் உள்ள சின்னரெட்டிபட்டி முதல் பொன்னம்பட்டி வழியாக பாதிரிபட்டி செல்லும் தார் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாதுகாப்பு வேண்டும்

கரூர் மாவட்டம், பாலத்துறை அருகே உள்ள கூலக்கவுண்டனூர் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்படுகிறது. அதன் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் அருகே நீர்த்தேக்க தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அந்த மின்மோட்டாருக்கு பள்ளி அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின் மோட்டாருக்கு இந்த மின்கம்பத்தில் ஸ்விட்ச் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்விட்ச் பாக்ஸ் 24 மணி நேரமும் திறந்து கிடக்கிறது. அந்த சுவிட்ச் பாக்சில் 24 மணி நேரமும் மின்சாரம் இருந்து வருகிறது. அதன் அருகில் பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்