பழுதடைந்த ெதாகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும்

ஏ.நாகூர் ஊராட்சியில் பழுதடைந்த ெதாகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-07-08 16:25 GMT

நெகமம்

ஏ.நாகூர் ஊராட்சியில் பழுதடைந்த ெதாகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ெதாகுப்பு வீடுகள்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்டது, ஏ.நாகூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஏ.நாகூர் கிராமத்தில் தொகுப்பு வீடுகள் உள்ளன. இவை அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த வீடுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் வீடுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக அனைத்து வீடுகளிலும் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் அந்த வீட்டில் குடியிருக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

மேற்கூரை பெயர்ந்து...

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அனைத்து வீடுகளிலும் சுவர்கள் இடிந்து விழுந்து, மேற்கூரைகள் பெயர்ந்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் யாரும் உள்ளே தங்குவதில்லை.

மேலும் இங்கு வசிப்பவர்கள் அனைவருமே கூலி வேலைதான் செய்து வருகின்றனர். அதனால் அந்த வீடுகளை சீரமைக்க முடிவதில்லை. தற்போது மழை பெய்து வருவதாலும், பலத்த காற்று வீசி வருவதாலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதற்கு முன்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும்.

மாற்று ஏற்பாடு

கடந்த ஆண்டு இதே பகுதியில் வசித்த 73 வயது மூதாட்டி குடியிருந்த வீடு மழைக்கும் தாக்குப்பிடிக்காமல் மேற்கூரையுடன் அப்படியே விழுந்து தரை மட்டமானது. ஆனால் அந்த மூதாட்டி அருகில் இருந்த ஆட்டு கொட்டகையில் தங்கியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இன்னும் அந்த வீடு அப்பேடியேதான் உள்ளது. எனவே பழுதடைந்த வீடுகளை சீரமைக்கவோ அல்லது மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கவோ அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்