சூளகிரி:
சூளகிரி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் பால் பரிசோதகர் இறந்தார்.
பால் லாரி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் இருந்து நேற்று தனியார் பால் லாரி சூளகிரி நோக்கி வந்தது. இந்த லாரியை போச்சம்பள்ளி அருகே பணத்தூரை சேர்ந்த முத்து (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் பாலக்கோடு அருகே வேப்பம்பள்ளி பகுதியை சேர்ந்த பால் பரிசோதகர் சிவபிரகாஷ் (24) என்பவரும் உடன் வந்தார்.
அப்போது சூளகிரி அருகே கீழ் முரசுப்பட்டி பகுதியில் லாரி வந்தபோது பிரேக் பிடிக்காததால் தறிகெட்டு ஓடியது. அதனை நிறுத்த முயன்றும் முடியவில்லை. சாலையோரமாக லாரியை நிறுத்த டிரைவர் முயன்றார். அப்போது உயிர் தப்பிக்க சிவபிரகாஷ் கீழே குதித்தார்.
விசாரணை
ஆனால் பால் லாரி அவர் மீது கவிழ்ந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே சிவபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் லேசான காயங்களுடன் டிரைவர் முத்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று சிவபிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.