வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வந்தார்களா? வானில் தெரிந்த மர்ம பொருட்களால் பரபரப்பு
சென்னை அருகே முட்டுக்காடு கடல் பகுதியில் வானில் மர்ம பொருட்கள் தென்பட்டது. அது வேற்று கிரகவாசிகள் பயன்படுத்தும் பறக்கும் தட்டு என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.;
சென்னை,
உலகம் முழுவதும் 'ஏலியன்ஸ்' என்ற வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் வேற்று கிரகவாசிகள் பயன்படுத்திய வாகனங்கள், அவர்களுடைய உடல்கள் இருப்பதாக முன்னாள் விமானப்படை உளவுத்துறை அதிகாரி டேவிட் குரூஸ் தெரிவித்தார். மேலும் வேற்று கிரகவாசிகளின் வாகனத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது உலக நாடுகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய பேச்சு அடங்குவதற்குள், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னை அருகே கடல் பகுதியில் வானில் 4 பறக்கும் தட்டுகள் போன்ற மர்ம பொருட்கள் பறந்தது தொடர்பான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் கடந்த மாதம் 26-ந் தேதியன்று மாலை 5.30 மணிக்கு ஓய்வுபெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் பிலிப் தனது மனைவியுடன் அமர்ந்திருந்தார். அப்போது வானில் ஏதோ மர்மமான பொருட்கள் உலா வருவது போன்று பார்த்துள்ளார்.
பறக்கும் தட்டு
தரையில் இருந்து பார்க்கும்போது வானில் இருந்து கண்ணை கவர்ந்து இழுக்கும் வகையில் ஒளிக்கீற்று மட்டும் தெரிந்திருக்கிறது. பிரதீப் பிலிப் உடனே தனது செல்போனை எடுத்து, வானில் ஊர்வலமாக வந்த அந்த பொருட்களை படம் பிடித்தார். 20 முதல் 25 வினாடிக்குள் வானில் தோன்றிய அந்த வெளிச்சம் வடக்கு நோக்கிய வான்பகுதியில் நகர்ந்து திடீரென மறைந்துபோனது. செல்போனில் படம் பிடித்த அந்த காட்சியை அவர் பெரிதாக்கி பார்த்தார். அப்போது, பறக்கும் தட்டு போன்று 4 உருவம் தெரிந்தது கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தார். பறக்கும் தட்டு வடிவிலான அந்த மர்ம பொருட்களின் படத்தை பிரதீப் பிலிப் வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து பிரதீப் பிலிப் கூறுகையில், "நான் படம் பிடித்தது டிரோன் மற்றும் சிறிய விமானம் போன்று இல்லை. ஆனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையிலான ஒரு பறக்கும் தட்டாகவே அமைந்துள்ளது. பறக்கும் தட்டுகள் வானில் பறப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் அதனை படமாக யாரும் பதிவு செய்தது இல்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக எடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்" என்றார்.
நாசவேலையா?
பறக்கும் தட்டு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த சபீர் உசேன் கூறும்போது, "இந்தியாவில் பறக்கும் தட்டு பார்த்ததாக பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் இதுவரையிலும் யாரும் புகைப்படம் எடுத்தது இல்லை. இந்த புகைப்படத்தை பார்க்கும்போது ஒரே கோணத்தில்தான் 4 பொருட்களும் பறப்பதாக தெரிகிறது. இதேபோன்று 1980-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள விமானப்படை தளத்தின் மேற்பரப்பில் ஒற்றை விளக்கு எரியும் வகையில் பறந்த மர்ம பொருள் ஒன்று வெடித்து பல்வேறு பகுதிகளில் சிதறி விழுந்தது" என்றார்.
முறையான விசாரணை மற்றும் ஆய்வு நடத்திய பின்னர்தான் முட்டுக்காடு கடல் பகுதியில் பறந்தது பறக்கும் தட்டா? வேற்று கிரகவாசிகள் தமிழகத்தில் வேவு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களா? வான்வழியாக தாக்குதல் தொடுப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலையா? அல்லது வானில் பறந்தது வித்தியாசமான வகையை சேர்ந்த பறவையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரிய வரும்.