குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்

குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம் காரணமாக குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

Update: 2023-06-02 10:00 GMT

குன்றத்தூர் நகராட்சியில் 25-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று காலை துப்புரவு பணியை புறக்கணித்து குன்றத்தூர் நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நகராட்சி கமிஷனர் தாமோதரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவை தெரிவிப்பதாக கூறினார். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதுபற்றி துப்புரவு பணியாளர்கள் கூறும்போது, "நாங்கள் பல ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வருகிறோம். தற்போது புதிய ஒப்பந்த முறையில் எங்களுக்கு பணி ஒதுக்கினால் நாங்கள் இதுவரை பணி செய்து வந்த ஆண்டுகள் கணக்கில் வராது. புதிதாக பணியில் சேர்ந்ததுபோல் இருக்கும். எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அல்லது பழைய ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்" என்றனர்.

துப்புரவு பணியாளர்களின் போராட்டம் காரணமாக குன்றத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்