அஞ்சல் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

நாமக்கல்லில் அஞ்சல் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-21 18:45 GMT

நாமக்கல் அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மணியாரன் தலைமை தாங்கினார். பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்புக்குழுவின் செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் குப்புசாமி, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி காளியப்பன், அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி ஆகியோர் போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், முடக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், ஓய்வூதியர் சங்கங்களை அங்கீகரிக்கவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்