தர்மபுரி தேர் விபத்து: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..!

தர்மபுரி அருகே தேர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Update: 2022-06-13 17:22 GMT

சென்னை,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் தேர் நிலை சேர்வதற்கு 50 அடி தூரத்தில் இருக்கும் போது திடீரென முன்புறமாக சாய்ந்து விழுந்தது. தேர் பக்தர்கள் மீது விழுந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் படுகாயமடைந்த மனோகரன் (வயது 57) மற்றும் சரவணன் (60) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்