தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று நேரில் ஆய்வு நடத்திய அரசின் முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான அதுல் ஆனந்த் தலைமை தாங்கி வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் பேசியதாவது:- அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் 57 கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் நிறைவேற்றுவதில் தர்மபுரி மாவட்டம் தமிழக அளவில் 6- வது இடத்தை பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு அனைத்து அரசு அலுவலர்களும் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உணவு வழங்கும் பணி
முன்னதாக மானியத அள்ளியில் தரிசு நிலத் தொகுப்பு குழு மூலம் பண்ணை குட்டை அமைத்தல், நிலத்தை சமன் செய்தல், ஜருகு சந்தை பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட நூலகம், சமுதாய சுகாதார வளாகம் ஆகியவற்றை முதன்மைச் செயலாளர் அதுல்ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதை தொடர்ந்து பாலக்கோடு ஒன்றியத்தில் சங்கம்பட்டி, சோமனஅள்ளி அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது உணவின் தரம் குறித்து மாணவ- மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மரியம் ரெஜினா உள்பட பலர் கலந்து கொண்டனர்.