திருச்சியில் சிறப்பு புலனாய்வு குழுவினருடன் டி.ஜி.பி. ஆலோசனை

ராமஜெயம் கொலை வழக்கு குறித்து திருச்சியில் சிறப்பு புலனாய்வுக்குழுவினருடன் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகீல்அக்தர் ஆலோசனை நடத்தினார்.;

Update:2022-07-27 00:31 IST

ராமஜெயம் கொலை வழக்கு குறித்து திருச்சியில் சிறப்பு புலனாய்வுக்குழுவினருடன் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகீல்அக்தர் ஆலோசனை நடத்தினார்.

ராமஜெயம் கொலை வழக்கு

திருச்சியை சேர்ந்த நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி-கல்லணைரோட்டில் பொன்னிடெல்டா பகுதி அருகே காவிரி ஆற்றங்கரையோரம் வீசப்பட்டு கிடந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் விசாரணை நடத்தியும் கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கவில்லை. 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு கோர்ட்டு உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டி.ஜி.பி. ஆலோசனை

போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் துணை சூப்பிரண்டு மதன் மற்றும் 50-க்கு மேற்பட்ட போலீசார் இடம் பெற்றுள்ளனர். மேலும் சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகீல்அக்தர் கண்காணித்து வருகிறார்.

இந்தநிலையில் டி.ஜி.பி. ஷகீல்அக்தர் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் அவர் சிறப்பு புலனாய்வுக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்தும், ஏதேனும் முக்கிய தடயம் சிக்கியுள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்ததோடு, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்பிறகு அவர் மாலையில் சென்னை புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்