தேவூர், எடப்பாடி பகுதியில் புதுமணதம்பதிகள் குடும்பத்துடன் தேங்காய் சுட்டு வழிபாடு
தேவூர், எடப்பாடி பகுதியில் புதுமணதம்பதிகள் குடும்பத்துடன் தேங்காய் சுட்டு வழிபாடு செய்தனர்.;
தேவூர்:
சேலம் மாவட்டம் எடப்பாடி, தேவூர் பகுதியில் ஆடிமாத பிறப்பையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேங்காய் சுட்டு வழிபாடு செய்தனர். தேங்காய் சுட பயன்படும் குச்சி விற்பனை ஜோராக நடந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
ஆடி 1-ந் தேதி புதுமண தம்பதிகளை பெண் வீட்டார் அழைப்பர். மாப்பிள்ளைக்கு எண்ணெய் தேய்த்து, புத்தாடை கொடுத்து சீர் செய்வது பெண் வீட்டார் வழக்கம். புதுமண தம்பதிகள், தேங்காய் சுட்டு விநாயகர் வழிபாடு செய்வர். ஒவ்வொரு வீட்டிலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தேங்காய் சுட்டு வழிபாடு செய்தனர்.
எடப்பாடி, வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம், தேவூர், செட்டிபட்டி, மயிலம்பட்டி, சென்றாயனூர் புள்ளாகவுண்டம்பட்டி, ஒடசக்கரை, கோனேரிபட்டி, உள்பட பல்வேறு இடங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தேங்காய் சுட்டனர். மாலையில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி அதிகளவில் நடந்தது.
தேங்காய் சுடும் விழாவையொட்டி எடப்பாடி மார்க்கெட்டில் தேங்காய், மரக்குச்சி மற்றும் 9 வகையான பொருட்கள் கொண்ட பாக்கெட் விற்பனை ஜோராக நடந்தது. எடப்பாடி, தேவூர், சாலையில் ஆங்காங்கே கட்டுக்கட்டாக மரக்குச்சிகள், தள்ளு வண்டிகள் மூலம் தேங்காய் விற்பனை செய்யப்பட்டது. தேங்காய் ஒன்று 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை, மூன்று சிறிய தேங்காய்கள் பத்து ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மரக்குச்சிகள் இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது