உடலில் கத்தி போட்டு ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

நவராத்திரி விழாவையொட்டி உடலில் கத்தி போட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.;

Update:2023-10-25 01:30 IST

நவராத்திரி விழாவையொட்டி உடலில் கத்தி போட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

நவராத்திரி விழா

நெகமம் பகுதியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை நடந்து வந்தது. மேலும் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த 20-ந் தேதி விளக்கு பூஜை, நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூைஜ நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று நவராத்திரி உற்சவ விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு அலகு சேர்வை செய்து சக்தி அழைத்தல் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் ஊர்வலமாக வந்தனர். விரதம் இருந்த பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடலில் கத்தி போட்டுக்கொண்டே ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் தீசிக்கோ, பெட்டிக்கோ என கோஷம் போட்ட படி வந்தனர்.

கத்தி போடும் நிகழ்ச்சி

பக்தர்கள் தங்களது உடலை வறுத்தி, கத்தியால் குத்திய படி ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாக சென்றனர். இதன் மூலம் அவர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கத்தி போடும் நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு பரவசம் அடைந்தனர்.

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சாமிக்கு மாவிளக்கு பூஜை, ராகு தீப பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அம்பு சேர்கை, அம்மன் திருவீதி உலா மற்றும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நவராத்திரி விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்