சொர்க்கவாசல் திறப்பின்போது சாமி சிலை கவிழ்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

ஆகம விதிப்படி சாமி சிலை அலங்காரம் செய்து பரிகார பூஜைகள் நடந்தன. பின்னர் கோவிலை சுற்றி கருடவாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

Update: 2023-12-23 20:00 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அளேபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று பரமபதம் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாளை சொர்க்கவாசல் வழியாக கண்டு தரிசனம் செய்தவற்காக ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலில் திரண்டனர்.

அதிகாலை முதல் சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 5.30 மணிக்கு லட்சுமி நரசிம்ம சாமி கருட வாகனத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷம் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து சாமி கோவிலை சுற்றி கருடவாகனத்தில் வீதி உலா வரும் வைபவம் நடந்தது. அதே நேரத்தில் கருடவாகனத்தை தாலாட்டிய படி பக்தர்கள் சுமந்து சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாமி சிலை தலைகுப்புற கீழே விழுந்தது. இதனால் கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலை விழுந்த இடத்தில் பக்தர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே சிலை மீது இருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தன. இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. கருட வாகனத்தில் சாமி சிலையை முறையாக கட்டவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து ஆகம விதிப்படி சாமி சிலை அலங்காரம் செய்து பரிகார பூஜைகள் நடந்தன. பின்னர் கோவிலை சுற்றி கருடவாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது சாமி சிலை கீழே விழுந்த சம்பவம் சமூக வலைத்தளத்திலும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்