ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சென்னை அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெண் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
சென்னை,
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சென்னையில் உள்ள அம்மன் கோவில்கள் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கத்தை காட்டிலும் கோவில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலை முதல் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனை தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன், கோலவிழியம்மன், பிராட்வே காளிகாம்பாள், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களில் பெண் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
கோவில் வளாகத்தில் பெண் பக்தர்கள் பொங்கலிட்டும், தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நாகாத்தமன் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
சூளை அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. மதிய வேளையில் கோவிலில் கூழ்வார்த்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில் மற்றும் பெருமாள் கோவில்களிலும் லட்சுமி அம்மனுக்கு பூஜை நடத்தப்பட்டு, பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
வடபழனி முருகன் கோவிலில் மீனாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதேபோல் மாங்காடு காமாட்சியம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், பெரியபாளையம் பவானியம்மன் ஆகிய கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தடுப்பு கட்டைகளால் ஆன வரிசை அமைக்கப்பட்டிருந்தது. கோவில்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
பல கோவிலில்களில் தீமிதி திருவிழா நடத்தப்பட்டது. அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்திய காட்சிகளையும் பார்க்க முடிந்தது.