அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மகா காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வீரபாண்டி அருகே உள்ளது தர்மாபுரி கிராமம். இங்குள்ள மகா காளியம்மன், ரெங்கநாதன்சாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் 3 நாட்கள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதனையடுத்து கோவில் முன்பு அக்னிச்சட்டி யாகம் வளர்க்கப்பட்டது. இதேபோல் ஊரின் முக்கிய வீதி வழியாக பக்தர்கள் அக்னிச்சட்டியை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னதாக அம்மனுக்கு பச்சை கலயம் எடுத்து செல்லுதல், காளிசூலம் எடுத்து ஊர்வலமாக செல்லுதல், தேவராட்டம் ஆகியவை நடந்தது. 3 நாட்கள் திருவிழாவில் கோலப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. வெங்கடாசலபுரம், ஸ்ரீரங்கபுரம், கோட்டூர், காட்டுநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் தர்மாபுரி கிராம மக்கள் செய்திருந்தனர்.