பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 1½ மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-04 19:00 GMT

விசாக திருவிழா

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில், முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

குறிப்பாக வாரவிடுமுறை, மாத கிருத்திகை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. பழனி முருகன் கோவிலில் தற்போது வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று 9-ம் நாளாகும். இதையொட்டி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பழனி வந்தனர். நேற்று வார விடுமுறை என்பதால், வெளியூர் பக்தர்களின் கூட்டமும் அலைமோதியது.

1½ மணி நேரம் காத்திருப்பு

குறிப்பாக கேரளா மாநில பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே பழனி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். நேற்று அதிகாலையிலேயே அவர்கள் சாமி தரிசனம் செய்ய பழனி மலைக்கோவிலுக்கு படையெடுத்தனர்.

இதன் எதிரொலியாக அதிகாலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் செல்லும் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதேபோல் ரோப்கார் நிலையத்தில் கவுண்ட்டரை தாண்டி கிரிவீதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோவிலில் பொது, கட்டணம் மற்றும் கட்டளை தரிசன வழிகளில் வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தரிசனம் செய்ய சுமார் 1½ மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.

சுட்டெரித்த வெயில்

பழனியில் நேற்று பகலில் கடும் வெயில் சுட்டெரித்ததால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அடிவார பகுதியில் உள்ள குளிர்பான கடைகளில் பக்தர்கள் குவிந்தனர். அங்கு வெயிலுக்கு இதமாக இளநீர், கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகினர்.

Tags:    

மேலும் செய்திகள்