பக்தர்கள் வெள்ளத்தில் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா

அணைக்கட்டு அருகே உள்ள வல்லண்டராமம் கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா நடந்தது. தேர் மீது உப்பு, மிளகு சூறையிட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.

Update: 2023-05-10 17:16 GMT

புஷ்பரத ஏரித்திருவிழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பொற்கொடி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை புஷ்பரத ஏரித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவை வேலங்காடு, பனங்காடு, வல்லண்டராமம், அண்ணாச்சி பாளையம் ஆகிய நான்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை 6 மணிக்கு ஏரியில் உள்ள பொற்கொடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேரோட்டம்

விழாவை முன்னிட்டு வேலூர், அணைக்கட்டு, ஊசூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், கணியம்பாடி, குடியாத்தம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ,சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே ஏரியில் குவிந்தனர். தொடர்ந்து நேற்று பக்தர்கள் ஆடு, கோழிகளை கோவில் முன்பு பலியிட்டும், பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ஏரித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பரத தேரோட்டம் மாலை 4.30 மணி அளவில் நடந்தது. விழா குழுவினர் புஷ்பரதத்தை விரைவில் ஏரிக்கு கொண்டு வர வேண்டுமென ஒலிபெருக்கியில் அறிவித்தும் அண்ணாச்சி பாளையம் கிராம மக்கள் உடனடியாக புஷ்பரதத்தை ஏரிக்கு கொண்டு வராததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக வந்ததால் கடும் வெயிலில் பக்தர்கள் தவித்தனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

காப்புக் கட்டி விரதம் இருந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலங்கரிக்கப்பட்ட புஷ்பரத தேரை தோள் மீது சுமந்தபடி ஏரிக்குள் கொண்டு வந்தனர். காலதாமதமாக ஏரிக்கு தேர் வந்ததால் வேலங்காடு கிராம மக்கள் தோள் மீது சுமந்து வந்த பக்தர்களை அப்புறப்படுத்திவிட்டு டிராக்டரில் புஷ்ப ரதத்தை அமர வைத்து ஏரி கோவிலை சுற்றி வந்து நிலை நிறுத்தாமல் வேலங்காடு கிராமத்திற்கு சென்றது.

தரிசனம் செய்ய கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை சுற்றி வந்தும், அம்மனுக்கு கற்பூரம் ஏற்றியும், ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர். மேலும் தேர் மீதும், கோவில் மீதும் உப்பு, மிளகு, நாணயம் உள்ளிட்டவைகளை சூறையிட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். சிலர் கோழிகளை கோவில் மேல் விட்டு நேத்திக் கடனை செலுத்தினர்.

விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு எந்த நோயும் தாக்கக்கூடாது என்பதற்காக கால் நடைகளை அழைத்து வந்து ஏரியில் உள்ள பொற்கொடி அம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி வந்தனர்.

மாட்டு வண்டிகள்

பச்சை ஓலைகளை கட்டிக்கொண்டு சாரை சாரையாக மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்களிலும் பக்தர்கள் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்டஊராட்சி குழு தலைவர் பாபு, தாசில்தார் வேண்டா, வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வேலழகன், ஒன்றியக் குழுத்தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் சித்ரா குமார பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம், ஊராட்சி மன்ற தலைவர் சைனலதாமணி, கீதா வெங்கடேசன், மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன், மாவட்ட அரங்காவலர் குழு உறுப்பினர் தேவி, மகேந்திரன், அருணாச்சலம், அம்மன் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அம்மன் என்ஜினீயரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் என்.ஞானசேகரன் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள்

திருவிழாவையொட்டி 50-கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வழிநெடுகிலும் பச்சைஓலை குடில் அமைத்து விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு நீர், மோர், பானம், கூழ், அன்னதானம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், பழனிமுத்து மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சி.லட்சுமணன், துணை ஆணையர் க.ரமணி, ஆய்வாளர் சுரேஷ்குமார், தக்கார் சி.நித்யா, வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் செயல்அலுவலர் அண்ணாமலை, விரிஞ்சிபுரம் செயல் அலுவலர் ஸ்ரீதரன், வெட்டுவனம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, மேலாளர் ஆறுமுகம், ஆனந்தன் மற்றும் நான்கு கிராம மேட்டுக்குடிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்ந்து நேற்று மாலை வேலங்காடு கிராமத்தில் புஷ்பரத தேர் வீதி உலாவும், இரவு தங்குதலும் நடந்தது. இதை அடுத்து இன்று (வியாழக்கிழமை) பனங்காடு கிராமத்தில் புஷ்பரத வீதி உலாவும், அண்ணாச்சிபாளையம் கிராமத்தில் இரவு தங்குதல், நாளை (வெள்ளிக்கிழமை) வேலங்காடு கிராமத்தில் வீதி உலாவும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்