2-ம் நாளாக தொடர்ந்த பக்தர்கள் கிரிவலம்-மறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
குருபவுர்ணமியையொட்டி நேற்று பவுர்ணமி தொடங்கி நிறைவடைந்த 2-ம் நாளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். போதிய பஸ்கள் இல்லாததால் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருணாசலேஸ்வரர் கோவில்
ஆனிமாத பவுர்ணமி குரு பவுர்ணமி என அழைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 7.42 மணியளவில் தொடங்கி நேற்று மாலை 5.49 மணியளவில் பவுர்ணமி நிறைவடைந்தது. இதனையொட்டி நேற்று முன்தினம் பகலில் இருந்து திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலம் வரக் கூடிய பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரை சுற்றி 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் மூலம் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
2-ம் நாள் கிரிவலம்
பவுர்ணமி நேற்று மாலை வரை நீடித்ததால் 2-ம் நாளாக நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அது மட்டுமின்றி கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் நீண்ட பொது தரிசனம் வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது.
மேலும் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் நேற்று இரவு வரை தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தது. மதியத்திற்கு மேல் தற்காலிக பஸ் நிலையங்கள் அகற்றப்பட்டதால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
திருவண்ணாமலை செங்கம் சாலையில் நகராட்சி மைதானத்தில் பெங்களூரு, செங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களுக்கான தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பஸ் நிலையத்தில் சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போதிய பஸ்கள் இல்லாததால் தற்காலிக பஸ் நிலையத்தின் எதிரில் பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்த பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.