ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் தடை
ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் தடை;
பொள்ளாச்சி
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள ஆழியாறு அணை நிரம்பியதால், நீர்வரத்தை பொறுத்து பாதுகாப்பு கருதி அவ்வப்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கோவில் நடை சாத்தப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் ஆற்றின் கரையோரத்தில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அத்துமீறி செல்வதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளம் குறைந்ததும், அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.