மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி முன்னேற்பாடுகள் - விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் ஆய்வு

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-07-15 08:14 GMT

இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கத்துடன் இணைந்து சர்வதேச அலைச்சறுக்கு போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சர்வதேச அலைச்சறுக்கு ஓபன்-2023 என்ற பெயரில் நடத்தப்படும் 3 ஆயிரம் தரப்புள்ளிகளை கொண்ட இந்த போட்டியில் பெறும் வெற்றியின் மூலம், உலக அலைச்சறுக்கு சாம்பியன் போட்டியில் பங்கேற்க முடியும். இதில் 20 பேர் கொண்ட இந்திய அணி உள்பட சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, வங்காளதேசம், நேபாளம், இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 அலைசறுக்கு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

சர்வதேச தரவரிசை புள்ளிகள் அடிப்படையில் பங்கேற்பதற்கு தகுதியானவர்களை இந்த போட்டி மூலம் சர்வதேச அலைச்சறுக்கு கூட்டமைப்பு தேர்வு செய்ய உள்ளது.

மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் அருகில் உள்ள கடல் பகுதியில் 7 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச அலைசறுக்கு போட்டி முன்னேற்பாடுகள் குறித்து நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் மேகநாதரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.வி.சாய்பிரனீத் உள்ளிட்ட சர்வதேச அலைசறுக்கு போட்டி குழுவினர் ஆய்வு செய்தனர்.

கடற்கரை கோவில் அருகில் உள்ள கடற்கரையில் அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல், மேடைகள், வரவேற்பு வளைவுகள், இருக்கைகள் அமைத்தல் குறித்து கடற்கரை வளாகத்தில் நடந்து சென்று அந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அதேபோல் அலைசறுக்கு போட்டிக்கு வரும் வீரர்களின் வாகனங்கள் நிறுத்த வாகன நிறுத்துமிடம், சுகாதார வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இனஸ்பெக்டர் விஜயகுமார், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் ஆகியோருடன் சர்வதேச அலைசறுக்கு போட்டி குழுவினர் ஆலோசனை கேட்டறிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்