கோவில் மாடுகளுடன் நாயக்கர் இன மக்கள் தேவராட்டம்
கோவில் மாடுகளுடன் நாயக்கர் இன மக்கள் தேவராட்டம் ஆடினர்.
குளித்தலை வட்ட பகுதியில் உள்ள சில ஊர்களில் உள்ள மந்தைகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர் இனமக்கள் பொங்கல் விழாவை முன்னிட்டு குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவிலுக்கு தாங்கள் வளர்க்கும் கோவில் மாடுகளுடன் வந்து வழிபடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இந்த வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர் இன ஆண்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் கோவில் மாடுகளுக்கு பூஜைகள் செய்து மாலை அணிவித்து ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தும். சிலர் கோமாளிவேடம் அணிந்தும் தங்கள் ஊர்களில் இருந்து அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவிலுக்கு வந்தனர். ஆண்கள் கையில் குச்சியுடன் மேல்சட்டை அணியாமல் வந்திருந்தனர். கோவிலுக்கு வந்த இவர்கள் கோவில் முன்பு தங்கள் மாடுகளை நிற்க வைத்து சந்தனம் பூசி பொட்டு வைத்து ரெத்தினகிரீசுவரரை வணங்கி மாடுகளுக்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் மாடுகளை சிறிது தூரம் ஓட செய்து மாலை தாண்டும் நிகழ்ச்சி நடத்தினர். இதன்பிறகு நாயக்கர் இனத்தின் ஆண்கள் கோவில் முன்பு கிராமம் கிராமமாக பிரிந்து தங்களின் பாரம்பரிய நடனமான தேவராட்டம் மற்றும் ஒயிலாட்டம் ஆடினார்கள். இந்த நிகழ்ச்சியை குளித்தலை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்திருந்து பார்த்து ரசித்தனர்.