தேவர் ஜெயந்தி: வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்..!
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்.;
சென்னை,
அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர போராட்ட வீரரும், சமுதாய சமநிலைக்காகவும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமைகளைக் களைவதற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, தேசியமும், தெய்வீகமும் தனது இரண்டு கண்களாகப் போற்றிய மாபெரும் தலைவர் 'தென்னாட்டு போஸ்' பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30.10.2023 (திங்கட்கிழமை) அன்று நடைபெற இருக்கிறது.
இதையொட்டி தேவர் திருமகனாரின் நினைவாலயம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்குச் சென்று அன்றைய தினம் காலை 10 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்.
இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர். ஊராட்சி, வட்ட/வார்டு. கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.