அரசு நிலங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு

குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரசு நிலங்கள் குறித்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.;

Update: 2023-05-25 18:54 GMT

சென்னை,

மதுரையில் உள்ள அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்தை பிரபல ஓட்டல் நிறுவனத்துக்கு 1968-ம் ஆண்டு அரசு ஒதுக்கியது.

25 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான குத்தகை காலம் 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்படி 36 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாடகையை செலுத்தா விட்டால், நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என 2015-ம் ஆண்டு மதுரை வடக்கு தாசில்தார் உத்தரவிட்டார்.

ரூ.300 கோடி நிலம்

இதை எதிர்த்து ஓட்டல் நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலத்தை ஓட்டல் நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாக எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அனுபவித்து வருகிறது.

நிதி நெருக்கடி உள்ளதாக அரசு கூறி வரும் நிலையில், அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை.

இணையதளத்தில்பதிவேற்றம்

அரசு நிலத்தை பயன்படுத்தி வரும் மதுரை ஓட்டலை ஒரு மாதத்தில் அப்புறப்படுத்தி அந்த நிலத்தை மீட்க வேண்டும். ஓட்டல் நிர்வாகத்திடம் இருந்து வாடகை பாக்கியை கணக்கிட்டு வசூலிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரசு சொத்துக்கள் குறித்த விவரங்களை மாவட்ட கலெக்டர்கள் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யும்போது குறிப்பிட்ட அந்த அரசின் சொத்து எந்த கிராமத்தில் உள்ளது, எவ்வளவு காலத்துக்கு, எவ்வளவு தொகைக்கு, எதற்காக குத்தகைக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என்பது போன்ற அனைத்து விவரங்களும் இடம்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்