வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களைஇணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கைதொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-08-05 18:45 GMT


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், சலூன், ஸ்பா, மருத்துவமனை, தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களிலும் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வகை நிறுவன வேலையளிப்பவர்களுக்கும், வெளிமாநில தொழிலாளர்கள் சட்டம் மற்றும் விதிகள், சட்டப்படி கிடைக்க வேண்டிய பலன்கள் ஆகியவை குறித்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் துண்டு பிரசுரங்கள் விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் வழங்கப்பட்டது.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு பயணப்படி, இடமாறுதல் பயணப்படி வழங்க வேண்டும். அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என அங்கீகரிக்கப்பட்ட முதன்மை வேலையளிப்பவர் முன்னிலையில் ஊதியம் வழங்க வேண்டும். அவர்களுக்கு இருப்பிடம், மருத்துவம், பாதுகாப்பு உடைகள், குடிநீர், கழிவறை வசதிகள், உணவகம், காப்பகம் ஆகிய வசதிகளை கட்டாயம் செய்து தர வேண்டும்.

நடவடிக்கை

மேலும் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948-ல் குறிப்பிட்டதை விட குறைவாக சம்பளம் வழங்கக்கூடாது. தமிழகத்தில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை, தமிழக அரசால் வெளிமாநில தொழிலாளர்களுக்கென உருவாக்கப்பட்ட (http://labour.tn.gov.in/ism/) இணையதளத்தில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பயனாளர் குறியீடு, கடவுச்சொல் ஏற்படுத்தி வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் எண், செல்போன் எண், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற முழு விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத நிறுவனங்கள் ஆய்வின்போது கண்டறியும்பட்சத்தில் தொழிலாளர் துறையால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்