களைக்கொல்லி தெளித்து மரங்கள் அழிப்பு
நித்திரவிளை அருகே களைக்கொல்லி தெளித்து மரங்கள் அழிப்பு;
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு சந்திப்பில் இருந்து வாவறை செல்லும் சாலையின் இரு புறத்திலும் நிழல் தரும் மரங்கள் வரிசையாக நடப்பட்டு உள்ளன. இந்த மரங்களை அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் ஓட்டுனர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். இதனால் இந்த மரங்கள் நல்ல செழுமையாக வளர்ந்து வந்தன. இந்தநிலையில் ஆட்டோ நிறுத்தம் அமைந்திருக்கும் பகுதியில் நின்ற 3 மரங்கள் திடீரென இலைகள் அனைத்தும் கருகி பட்டு போனது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அந்த மரங்களை ஆராய்ந்து பார்த்த போது யாரோ மர்ம நபர்கள் ரப்பர் தோட்டங்களில் புற்களை அழிக்க பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை தெளித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் நித்திரவிளை போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் களைக்கொல்லி தெளித்து மரங்களை அழித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.