கெட்டுப்போன இறைச்சி கிருமிநாசினி ஊற்றி அழிப்பு
பாளையங்கோட்டையில் கெட்டுப்போன இறைச்சி கிருமிநாசினி ஊற்றி அழிக்கப்பட்டது.;
பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் ஊழியர்கள் சாந்திநகரில் உள்ள முட்டை மற்றும் முட்டை சார்ந்த உணவு தயாரிப்பு கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில், பழைய கெட்டுப்போன கோழி இறைச்சி 60 கிலோ, குளிர்சாதனப்பெட்டியில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து, கிருமிநாசினி தெளித்து அழிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.12 ஆயிரம் ஆகும். கடையின் உரிமையாளரான கவுபதுல்லாவுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருளை கையாண்டதற்காக ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சங்கர்நகரில் உள்ள ஒரு பழக்கடையில், கெட்டுப்போன பழஜூஸ் 15 லிட்டர், ரோஸ்மில்க் 10 லிட்டர் மற்றும் பாதாம் பால் 6 லிட்டர் குளிர்சாதனப்பெட்டியில் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பழஜூஸ் மற்றும் குளிர்பானங்களை பறிமுதல் செய்து, கிருமிநாசினி தெளித்து அழித்தனர். கடையின் உரிமையாளரான முருகேசனுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.