தையல் எந்திரம் பெற ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்
தையல் எந்திரம் பெற ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 2023-2024-ம் நிதியாண்டிற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட குடும்ப வருமானச்சான்று (ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்), வயது சான்றிதழ் (20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்), அரசுபதிவு பெற்ற தையல் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்றிதழ் (6 மாதம்), சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகியவற்றுடன் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.