குரூப் 2 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
குடியாத்தத்தில் குரூப்-2 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பலர் கண்ணீர்விட்டு அழுதபடி திரும்பிச்சென்றனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் குரூப்-2 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பலர் கண்ணீர்விட்டு அழுதபடி திரும்பிச்சென்றனர்.
குரூப்-2 தேர்வு
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் குரூப்-2 தேர்வு எழுத 5,246 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக குடியாத்தம் பகுதியில் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத வருபவர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூட மையத்திற்கு வர வேண்டும்.
ஹால் டிக்கெட் உள்ளிட்டவைகளை சரிபார்த்த பின் 8.50 மணிக்கு தேர்வு அறைகளில் அமர்த்தப்படுவார்கள். 9 மணிக்கு தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரியின் கதவுகள் மூடப்படும். அதன்பின் வருபவர்கள் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனுமதி மறுப்பு
தேர்வு எழுதுவதற்காக நேற்று காலை முதலே அந்தந்த தேர்வு மையத்திற்கு தேர்வு எழுபவர்கள் வாகனங்களிலும், தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள், திருமணமான பெண்கள் தன் கணவருடன், சிலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
8.50 மணி அளவில் அவர்களுடைய ஹால் டிக்கெட் சரி பார்த்த பின் தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர். 9 மணி அளவில் கதவுகள் பூட்டப்பட்டன.
பல இடங்களில் 9 மணிக்கு மேல் சில நிமிடங்கள் தாண்டி வந்த தேர்வு எழுத வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர்.
தேர்வு எழுத வந்தவர்கள் கால தாமதத்திற்கான பல்வேறு காரணங்களை கூறியும் அவர்களை தேர்வு மையத்திற்குள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் அனுமதிக்கவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதாமல் திரும்பி சென்றனர். சிலர் கண்ணீர் விட்டபடி அழுதபடியே திரும்பி சென்றனர்.
கலெக்டர் ஆய்வு
குடியாத்தம் பகுதியில் மொத்தமுள்ள 5,246 பேரில், 745 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களை குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பார்வையிட்டனர்.
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.