பா.ஜனதா மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் -அண்ணாமலை பேட்டி

கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வலியுறுத்தி பா.ஜனதா மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2023-05-19 22:38 GMT

கோவை,

பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், கோவை ஈச்சனாரியில் நடந்தது. தமிழக பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி, அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடினமாக உழைக்க வேண்டும்

தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அன்பு வைத்து உள்ளார். இதனால் பல்வேறு திட்டங்களை அவர் வழங்கி வருகிறார். ஜனநாயகத்தின் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். எனவே பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த நாம் அனைவரும் தேனீக்களை போல சுறுசுறுப்பாக பணிகளை செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து அதிக எம்.பி.க்களை அனுப்ப வேண்டும் என்பதை இப்போதே திட்டமிட்டு அதற்கான பணியில் இறங்கி கடினமாக உழைக்க வேண்டும்.

துப்பாக்கி கலாசாரம்

கோவையில் சிலிண்டர் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி உள்ளது. எப்போது கொலை மற்றும் கலவரம் நடக்குமோ என்ற அச்சம் தமிழ்நாட்டில் இருக்கிறது.

ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ். ஆனால் பிரதமர் மோடி இதில் தலையிட்டு குழு அமைத்ததால் அந்த குழு சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டது. காமராஜர் எண்ணத்தின்படி கடைசி வீடு வரை தண்ணீர் கொண்டு செல்வதை பிரதமர் குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறார்.

பலப்பரீட்சை

வருகிற 2024-ம் ஆண்டு என்பது நமக்கு பலப்பரீட்சை. தற்போது எல்லா தீய சக்திகளும் ஒரே அணியில் திரண்டு உள்ளனர். எனவே நாம் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அண்ணாமலை, கூட்டம் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு காளைகளை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னரை சந்திக்க உள்ளோம்

பிரதமரின் தீவிர முயற்சியால்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்ப்பு வந்து உள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் வெள்ளமாக ஓடி வருகிறது. அதற்கு மக்கள் அடிமையாகிவிட்டனர். தமிழகத்தில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் மது இருக்கிறது. இதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் நாளை (இன்று) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேலும் நாளை மறுநாள்(நாளை) காலையில்தமிழக கவர்னரை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சருக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற மனுவையும் வழங்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

ஜல்லிக்கட்டு விளையாட்டை நிரந்தரமாக மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது, தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. அத்துடன் அரசு மதுபான கடைகளும் அதிகளவில் திறக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த செயற்குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், நடிகை நமீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்