மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் வேலூர் கிளை சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கெஜராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சத்தியநாராயணன், மாநிலக்குழு உறுப்பினர் ஜனார்த்தனன், மாவட்ட செயலாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். 8 மணி நேரம் வேலை நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். மருந்து விற்பனையில் டார்கெட் நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் தாமோதரன் நன்றி கூறினார்.