மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓமலுர் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.
ஓமலூர்:-
ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் உரிமைக்கான பாதுகாப்போர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை பணி நேரத்தை 4 மணி நேரமாக குறைத்து வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் கார்டுகளை பி.எச்.ஏ. அல்லது ஏ.ஏ.ஒய். கார்டாக மாற்றி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க ஓமலூர் ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் கனகராஜ், ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் அமலா ராணி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஏழுமலை, செல்லமுத்து, ஒன்றிய துணைத் தலைவர்கள் ஜெயராஜ், மீனா ஒன்றிய பொருளாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.