காய்கறி மாலை அணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் அ.தி.மு.க.வினர் கழுத்தில் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் அ.தி.மு.க.வினர் கழுத்தில் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விலைவாசி உயர்வு
தமிழகத்தில் விலைவாசி உயர்வை பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எவ்வித கவலையும் இல்லை. சீரகம் கிலோ ரூ.260-ல் இருந்து ரூ.960-ஆகவும், பாசிபயறு ரூ.75-ல் இருந்து ரூ.140, புளி ரூ.140-ல் இருந்து ரூ.260, மிளகாய் ரு.195-ல் இருந்து ரூ.450 என அனைத்து பொருட்களும் பல மடங்கு உயாந்து இருக்கிறது.
அதுபோன்று கட்டுமான பொருட்களும் 2 மடங்காக உயர்ந்து இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்தபோது கூட்டுறவு துறைக்கு பணம் ஒதுக்கி, அந்த சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்பட்டன.
அக்கறை இல்லை
ஆனால் அதை செய்யாமல், காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடகாவுக்கு, கூட்டணி தொடர்பாக பேச பெங்களூரு சென்று இருக்கிறார். அங்கு சென்று காவிரி நதிநீர் பற்றி பேசினாரா? இதை வைத்து பார்க்கும்போதே அவருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 90 சதவித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் ஒரு வாக்குறுதி கூட ஒழுங்காக நிறைவேற்றவில்லை. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி பால்விலை, மின்சார கட்டணம், சொத்துவரி ஆகியவைதான் உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆட்சிக்கு வருவது உறுதி
தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எப்போது முதல்-அமைச்சர் ஆவார் என்று பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று எங்கள் பொதுச்செயலாளர் தெளிவாக சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டின் நலனுக்காகதான் நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து உள்ளோம்.
எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவது நாங்கள்தான். மக்களுக்கான ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். எனவே மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருவது உறுதி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.பி. தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு மற்றும் வால்பாறை அமீது, மாநில கோ-ஆப்டெக்ஸ் சேர்மன் ஏ.வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் ராஜ்குமார், செல்வகுமார், காட்டூர் செல்வராஜ், கே.என்.செந்தில்குமார், மற்றும் தோப்பு அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், சிங்கை முத்து, சூலூர் தொகுதி முன்னாள் செயலாளர் லிங்குசாமி, சூலூர் ஒன்றிய செயலாளர்கள் ஜி.குமரவேல், வி.பி.கந்தவேல், விவசாய அணி செயலாளர் பதுவம்பள்ளி என்.செந்தில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.அர்ஜூனன், காளப்பட்டி பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் குறிஞ்சி மலர் பழனிசாமி, அத்திப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா புருேஷாத்தமன், கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.