புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி சேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-08 20:38 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மோளையானூர் கிராமத்தில் பட்டா நிலத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியை சேர்ந்த 20 குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மேலும், பழங்குடி மக்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மோளையானூர் கிராமத்தில் பழங்குடி மக்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், அவர்களது நிலத்தை கோர்ட்டு உத்தரவுப்படி அளவீடு செய்து திரும்ப ஒப்படைத்து பட்டா வழங்கக்கோரியும் சேலத்தில் நேற்று புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜீவானந்தம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ரமணி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பழங்குடி மக்களை அப்புறப்படுத்தும் பொதுப்பணித்துறையினரையும், பொய் வழக்கு போடுகிற வனத்துறையினரையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்