அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
உணவு பொருட்கள் வழங்கியதில் முறைகேட்டை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டையில் உள்ள நூகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து தளி மற்றும் கெலமங்கலம் ஒன்றியங்களில் இயங்கும் அங்கன்வாடி மையங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், உப்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் பையில்காடு, கோணமாக்கனப்பள்ளி, பேல்பட்டி, இஸ்லாம்பூர், அரசகுப்பம், ஏணிபண்டா, பிளிமுத்திரை, மரகட்டா உள்பட 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு உணவு பொருட்கள் வழங்காமல் வழங்கியது போல் போலி பில் தயாரித்து கையெழுத்து போட்டு உணவு பொருட்களில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவி கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு சரியான அளவில் உரிய நேரத்திற்கு உணவு பொருட்கள் வழங்க வேண்டும். உரிய ரசீதுடன் உணவு பொருட்கள் வழங்க வேண்டும். உணவு பொருட்கள் வழங்கியதில் முறைகேடு செய்தவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.