டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஏற்றுக்கூலி ஒரே மாதிரி நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் டாஸ்மாக் குடோன் முன்பு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் முனியப்பன், பொருளாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. நிர்வாகி சிவராஜ் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுபான உற்பத்தி ஆலைகள், இறக்குகூலி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.