வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தருக - அண்ணாமலை

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-04 13:32 GMT

சென்னை,

பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட S.V.Gபுரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் வீடு கட்டி வசித்து வந்த ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை, எந்த வித முன்னறிவிப்புமின்றி, வீடுகளில் இருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளித் துன்புறுத்தி, அத்துமீறி இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.

பட்டா இருந்தும் தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால், ஒதுங்க இடமின்றி, வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் பந்தல் அமைத்து அமர்ந்திருந்த, எட்டு பெண்கள் உட்பட 25 பேரையும் கைது செய்து அத்து மீறியிருக்கிறது காவல்துறை. திருத்தணி யூனியன் பாஜக மண்டலத் தலைவர் வீர பிரம்மச்சாரி மற்றும் ஆர்.கே.பேட்டை மண்டலத் தலைவர் S.K.பாலாஜி ஆகியோரையும் கைது செய்திருக்கிறது திமுக அரசு.

கும்மிடிப்பூண்டியில், பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன், திருவள்ளூரில் ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.

திமுகவின் இந்த பொதுமக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு, பட்டா இடத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்