ரெயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பு: 31 வீடுகள் இடித்து அகற்றம்

சேலம் அருகே ரெயிவே நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 31 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.;

Update:2022-05-29 02:22 IST

சூரமங்கலம்:

சேலம் அருகே ரெயிவே நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 31 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு

சேலம் சூரமங்கலம் அருகே ஜாகீர்ரெட்டிபட்டி பகுதியில் ரெயில்வே நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்தனர், இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் கடந்த 2020-ம் ஆண்டு முதற்கொண்டு ரெயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த குடியிருப்பு பகுதிகளை அகற்ற நடடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் தலைமையில் ரெயில்வே அதிகாரிகள் அங்கு வசித்து வந்த மக்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கினர். அதாவது இந்த நிலங்கள் ரெயில்வேக்கு சொந்தமானது. எனவே நீங்களாகவே இங்குள்ள வீடுகளை எந்த ஒரு சேதாரமும் இல்லாதபடிக்கு அகற்றிக்கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதற்கான உதவிகளை அரசாங்கத்திடம் நாங்கள் தெரிவிக்கிறோம். அதன் மூலம் உங்களுக்கு தீர்வு காணப்படும் என்றனர்.

பாதுகாப்பு

இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்களில் சிலர் தாமாகவே முன்வந்து சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிக்கொண்டனர். எனினும் 31 வீடுகள் அகற்றப்படாமல் இருந்தன. இது குறித்து பலமுறை ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் இருந்த வீடுகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சேலம் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அரவிந்த் குமார், சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

31 வீடுகள்

இதைத்தொடர்ந்து சேலம் மேற்கு தாசில்தார் தமிழரசி தலைமையில், ரெயில்வே நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 31 வீடுகள் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்