டெல்லி முதல் திலி வரை; திமோர்-லெஸ்டே தலைநகரில் இந்திய தூதரகம் - பிரதமர் மோடி அறிவிப்பு
தென்கிழக்கு ஆசிய நாடான திமோர்-லெஸ்டேவின் தலைநகர் திலியில், இந்திய தூதரகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.;
Image Courtesy : @MEAIndia twitter
ஜகார்தா,
ஆசியான்-இந்தியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றுள்ளார். இந்தோனேசியா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் மிகப்பெரிய அளவில் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பின்னர் ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "நமது கூட்டாண்மை நான்காவது தசாப்தத்தில் நுழைகிறது. இந்தியாவின் கிழக்கு கொள்கையில் ஆசியான் மையத்தூணாக விளங்குகிறது. இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் அமைப்பின் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது.
இந்தோ-பசிபிக் முயற்சியில் ஆசியான் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது. உலக வளர்ச்சியில் ஆசியான் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சியின் மையமாக உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைக்கு மத்தியிலும் நமது பரஸ்பர ஒத்துழைப்பில் நிலையான முன்னேற்றம் உள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான திமோர்-லெஸ்டேவின் தலைநகர் திலியில், இந்திய தூதரகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி, 'டெல்லி முதல் திலி' வரை இந்தியாவின் கிழக்கு கொள்கை செயல்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.