சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதம் - பொதுமக்கள் கருத்து

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதம் ஆகிறதா என்று பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

Update: 2023-06-04 18:45 GMT

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் முறையையும் கடைப்பிடித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாகவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,068.50-க்கு வினியோகிக்கப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மத்திய அரசு மானியம் வெறும் ரூ.24 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதுவும் அனைவருக்கும் மானியம் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

தவிப்பு

சென்னையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சில இடங்களில் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய சிலிண்டர்கள் உடனே வராததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். அதுபோல் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல பகுதியில் முன்பதிவு செய்த 8 நாட்களுக்கு பிறகே சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

சில வாடிக்கையாளர்கள் கியாஸ் அலுவலகங்களுக்கே சென்று காலி சிலிண்டர்களை கொடுத்து புதிய சிலிண்டர் கேட்கிறார்கள். பல வாடிக்கையாளர்கள் 2 சிலிண்டர் வைத்திருந்தாலும் கடைசி நேரத்திலேயே முன்பதிவு செய்து சிலிண்டர் கிடைக்காமல் திணறுகிறார்கள்.

கொரோனா தொற்று ஊரடங்கின்போது கூட சிலிண்டர் தாமதமின்றி கிடைத்தன. தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

தாமதம்

விழுப்புரம் அருகே சிறுவானூரை சேர்ந்த இல்லத்தரசி ஜெயந்தி பரசுராமன்:-

தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்தால் கிடைப்பதற்கு 2, 3 நாட்கள் ஆகிறது. கிராமப்புறங்களில் சில சமயங்களில் ஒரு வாரம் வரை ஆகிறது. இந்த நிலை மாறி, பதிவு செய்தவுடனே சிலிண்டர் கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டரையே நம்பி சமைத்துக்கொடுப்பது என்பது பெண்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் கிராமப்புறங்களில்கூட விறகு அடுப்பில் சரிவர சமைப்பது இல்லை. இதனால் பதிவு செய்தவுடன் கியாஸ் சிலிண்டர் கிடைத்தால்தான் எந்தவித சிரமமும் இருக்காது, உடனடியாக சமைக்க முடியும். எனவே பதிவு செய்த 2 நாட்களுக்குள் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே சிலிண்டருக்கான மானியத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த மானியத்தொகை வங்கி கணக்கில் சரிவர வரவு வைக்கப்படுவதில்லை. இதனால் சிலிண்டர் கம்பெனி ஏஜெண்டுகளிடம் சென்று கேட்டால் அதைப்பற்றி எங்களுக்கு தெரியாது என்று கூறுகின்றனர். மானியம் கிடைத்தால் அத்தொகை, குடும்ப பெண்களுக்கு சில நேரங்களில் பெரிய உதவியாக இருந்தது. சமைப்பதற்கான காய்கறிகளை வாங்குவதற்கும், சோப்பு போன்ற பொருட்கள் வாங்கவும் ஏற்றதாக இருக்கும். எனவே மீண்டும் சிலிண்டருக்கான மானியத்தொகையை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கூடுதல் மானியத்தொகை

மேல்மலையனூர் அருகே கோட்டப்பூண்டி கிராமத்தை சேர்ந்த பூங்கொடி:-

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் ஓராண்டுக்கு முன்பு, பதிவு செய்துவிட்டு 15 நாள் அல்லது 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட இடத்தில் சிலிண்டர் வாகனம் நிற்கும். அங்கு வரிசையில் காலி சிலிண்டர்களை வைத்துவிட்டு நம் பெயர் கூப்பிடும்போது சிலிண்டர் எடுக்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. பதிவு செய்த ஓரிரு நாட்களிலேயே சிலிண்டர் கிடைத்துவிடுகிறது. அதுவும் தற்போது வீதி, வீதியாக சிலிண்டர் வாகனம் வருவதால் எளிதில் எடுத்துக்கொள்ள முடிகிறது. இதனால் எந்தவித காலதாமதமும் ஏற்படவில்லை. நாம் வாங்காமல் விட்டுவிட்டால் பதிவு ரத்து செய்யப்பட்டு விடுகிறது. மீண்டும் பதிவு செய்தால்தான் சிலிண்டர் எடுக்கும் நிலை உள்ளது. இதுவும் வரவேற்கத்தக்கது. மானியத்தொகையை பொறுத்தவரை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. மத்திய அரசு, சிலிண்டருக்கு எவ்வளவு மானியத்தொகையோ அதை அப்படியே வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் கியாஸ் சிலிண்டர் முறையாக கிடைக்கின்றது. ஆனால் மானியத்தொகை மட்டும் சற்று கூடுதலாக வழங்க வேண்டும்.

உறுதி செய்ய வேண்டும்

செஞ்சியை சேர்ந்த மங்களம்:-

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மட்டும் அதிகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் குறையும்பட்சத்தில் சிறிதளவுதான் விலை குறைகிறது. சிலிண்டருக்கு பதிவு செய்தால் சில சமயத்தில்தான், ஒரு சில நாட்களில் வந்து விடுகிறது. பல நேரங்களில் பதிவு செய்து ஒரு வாரம், 10 நாட்கள் கழித்துதான் வருகிறது. இதனால் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறோம். மேலும் சிலிண்டர்களை வீட்டுக்கு எடுத்து வந்து போடும்போது அதற்கு தனியாக 20-லிருந்து 50 ரூபாய் வரை வாங்கிக்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். பதிவு செய்தால் ஓரிரு நாட்களிலேயே கியாஸ் சிலிண்டர், வீட்டுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். சிலிண்டருக்கான மானியத்தை பொறுத்தவரை வங்கி கணக்கில் முறையாக இதுவரை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உடனுக்குடன்

திண்டிவனம் பகுதியில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர் கிரி:-

திண்டிவனம் பகுதியில் பொதுமக்கள், சமையல் கியாஸ் சிலிண்டர் தேவை குறித்து மிஸ்டு கால் அல்லது பதிவு செய்தவுடன் உடனடியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கம்பெனியில் காலாவதியான சிலிண்டர்கள் புதியதாக மாற்றப்பட்டு புதிய சிலிண்டர் மார்க்கெட்டில் வருவதால் ஒரே நாளில் வழங்கப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் ஓரிரு நாள் கழித்து வழங்கப்பட்டது. ஆனால் தற்போது புதிய சிலிண்டர்கள் மாற்றப்பட்டு விட்டதால் உடனுக்குடன் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு ஓரிரு நாள் கழித்து வழங்கப்படுவது திண்டிவனம் பகுதியில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் பெரும்பாலான வீடுகளில் 2 சிலிண்டர்கள் வைத்திருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மறுநாளே வீடு தேடி வருகிறது

கள்ளக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல்:-

சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது செல்போனில் பதிவு செய்த உடனே, அதை உறுதிப்படுத்துவதற்கான குறுந்தகவல் செல்போன் இணைப்புக்கு வந்துவிடுகிறது. மற்றொரு குறுந்தகவலில் சிலிண்டரின் தொகை எவ்வளவு என்ற விவரமும் வருகிறது. இந்த குறுந்தகவலுடன் ஏஜென்சிக்கு சென்றாலே உடனடியாக சிலிண்டரை எடுத்துக்கொள்ள முடியும். அதே நேரத்தில் தற்போது சிலிண்டர் பதிவு செய்த மறுநளே வீடுதேடி அதற்கான ஊழியர்கள் வந்து தந்துவிடுகிறார்கள். இதனால் காலதாமதம் என்பது பெரியளவில் இ்ல்லை.

கள்ளக்குறிச்சி சமூக ஆர்வலர் செந்தில்குமார்:-

தற்போது சிலிண்டர் பதிவு செய்தவுடன் தட்டுப்பாடு இன்றி உடனடியாக கிடைக்கிறது. நாம் பதிவு செய்தவுடன் நமது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வருகிறது. இதை பயன்படுத்தி நாம் நேரடியாக சென்று சிலிண்டர் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் வாகனத்தில் வந்து வீட்டுக்கு நமக்கு வினியோகம் செய்யும் போது ஒரு சிலிண்டருக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூல் செய்கிறார்கள்.

கூடுதலாக கட்டணம் கொடுப்பதையும் பெரும்பாலான மக்கள் பெரிதாக நினைப்பதில்லை. ஏனெனில் எங்கும் அலையாமல் வீட்டுக்கே சிலிண்டர் வந்துவிடுகிறதே'.

மாற்றும் பணி

எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

ஆயுட்காலம் நிறைவடைந்த பழைய சிலிண்டர்களை கண்டுபிடித்து அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்தப்பணி கடந்த 2 மாதமாக நடந்தது. கியாஸ் கசிவு இல்லாத சிலிண்டர்கள் மாற்றப்படவில்லை. மேலும் 10 ஆண்டுகள் பயன்படுத்த முடியும் என்று உறுதி செய்யப்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் பயன்பாட்டிலேயே இருந்து வருகிறது. இந்தப்பணியால் ஒரு சில பகுதிகளில் சிலிண்டர்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இவற்றை சரி செய்வதற்காக எண்ணூர் பகுதியில் உள்ள கியாஸ் நிரப்பும் நிலையத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு பதிலாக பிற இடங்களில் உள்ள கியாஸ் நிரப்பும் நிலையங்களில் கூடுதலாக சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது விழுப்புரம்- கள்ளக்குறிச்சியை பொறுத்தவரையில் சிலிண்டர் தட்டுப்பாடு எங்கும் இல்லை. பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வராத வகையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய அனைத்து வினியோகஸ்தர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்