1,121 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்

காளீஸ்வரி கல்லூரியில் விழாவில் 1,121 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

Update: 2022-10-01 19:51 GMT

சிவகாசி,

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நேற்று காலை 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் செயலர் செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் கலந்து கொண்டு 1,121 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த மேடையில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. நீங்கள் உங்களை முதலில் நம்புங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உங்களை தேடி வரும். எடுத்த காரியங்களை துணிச்சலோடும், நம்பிக்கையோடும் செய்யுங்கள். கொரோனா காலத்தில் அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்து இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தடுப்பூசிகளை அனுப்பி வைத்த பெருமை இந்தியாவை சேரும். நாட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. அவைகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் இலக்குகளை நிர்ணயம் செய்து அதை நோக்கி பயணம் செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். நீங்கள் (மாணவர்கள்) பிறருக்கு உதவி புரியும் அளவிற்கு உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருங்கள் அது உங்களை மேன்மைப்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இயக்குனர் வளர்மதி, துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்