கடற்படை விமானத்திற்குரிய பாதுகாப்புஉபகரணங்களை தயாரிக்க வேண்டும்

கடற்படை விமானங்களில் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க முன்வர வேண்டும் என்று தொழில் துறையினருக்கு கடற்படை அதிகாரி அறிவுறுத்தினார்.

Update: 2023-05-11 22:30 GMT


கடற்படை விமானங்களில் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க முன்வர வேண்டும் என்று தொழில் துறையினருக்கு கடற்படை அதிகாரி அறிவுறுத்தினார்.

கலந்தாய்வு கூட்டம்

இந்திய கடற்படையில் பயன்படுத்தப்படும் விமானங்களில் பயன்படுத்தும் உதிரிபாகங்கள் தயாரிப்பது தொடர்பாக தொழில் துறையினருடன் கலந்தாய்வு கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நடந்தது. பின்னர் விமான உதிரிபாகங்கள் கண்காட்சி நடந்தது.

இதை கடற்படை அதிகாரி (விமான பாகங்கள் பிரிவு) ரியர் அட்மிரல் தீபக் பன்சால் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதுகாப்பு உபகரணங்கள்

இந்திய கடற்படையில் விமானம் அல்லாத பிரிவில் அதிகளவில் உள்நாட்டுமயமாக்கலை அடைந்து உள்ளது. இங்கு பயன்படுத் தப்படும் பொருட்களில் 90 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப் பட்டவை ஆகும்.

கடற்படையில் பயன்படுத்தும் விமானங்களின் உதிரிபாகங்களில் பாதுகாப்பு அல்லாத பொருட்கள், மிகுந்த பாதுகாப்பு உள்ள பொருட்கள் என 2 வகையான பொருட்கள் உள்ளன.

இதில் பாதுகாப்பு அல்லாத பொருட்கள் உற்பத்தி செய்வதில் தான் அதிகளவில் தன்னிறைவு அடைந்து உள்ளோம்.

ஆனால் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் 2 சதவீத அளவில் தான் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து தான் வாங்கப்படுகிறது.

முன்வர வேண்டும்

நமது பிரதமர் நரேந்திரமோடி, உள்நாட்டு தயாரிப்பு பொருட் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். எனவே கடற்படையில் பயன்படுத்தும் விமானங்களில் பாதுகாப்பு மிகுந்த உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உபகரணங்களை செய்வது மிகவும் கடினம். ஆனாலும் சவாலாக எடுத்து அதை செய்யலாம்.

இதுதவிர கடற்படையில் பயன்படுத்தும் விமானம் அல்லாத முக்கிய பொருட்களான ஜாக்கிகள், தளங்கள் தோண்டும் ஆயுதங்கள், தள்ளுவண்டிகள் போன்ற உபகரணங்களையும் செய்ய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பல்வேறு சந்திப்புகள்

பெங்களூருவில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமான ராணுவ விமானத் தகுதி மற்றும் சான்றிதழுக்கான மையத்தில் சிறந்த தொழில்துறையை கண்டறிய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

அத்துடன் தொழில்துறையுடன் பல சந்திப்புகளை நடத்தி வருகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கையை வளர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கையை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கடற்படை அதிகாரிகள் விநாயகம், யோகேஷ் பாண்டி, வினோத், ஜஸ்டின் சேவியர், வினீத் ஜெயின், டேவிட் மற்றும் கொடிசியா சி.டி.ஐ.ஐ.சி. இயக்குனர்கள் வி.திருஞான சம்பந்தம், ஆர்.ராமமூர்த்தி, ஜி.தேவராஜ், ஆர்.சசிதரன், பி.பொன்ராம் மற்றும் கொடிசியா செயலாளர் ஆர்.சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்