பாதுகாப்பு மாத நிறைவு விழா
அரக்கோணம் எம்.ஆர்.எப். நிறுவனத்தில் பாதுகாப்பு மாத நிறைவு விழா நடந்தது.
அரக்கோணம் எம்.ஆர்.எப். நிறுவனம் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தினை பாதுகாப்பு மாதமாக கடைபிடித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தேசிய பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த பல்வேறு போட்டிகள் நடத்தினர். பாதுகாப்பு மாத நிறைவு விழா நிகழ்ச்சி எம்.ஆர்.எப். நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் பொதுமேலாளர் ஜான் டேனியல் தலைமை தாங்கினார். பாதுகாப்பு மேலாளர் தினகரன் தாமஸ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பாதுகாப்பு மாதத்தில் தொழிலாளர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முதுநிலை உற்பத்தி மேலாளர் இக்னேஷியஸ் ஜார்ஜ், மூத்த பாதுகாப்பு மேலாளர் பஞ்சாபகேசன், பாதுகாப்புக் குழு தலைவர்கள் சிவகுமார், கார்த்திகேயன், பொறியியல் துணைபொது மேலாளர் எல்வின், கணக்கியல் துணைபொதுமேலாளர் கணபதி, மூத்த மனிதவள மேலாளர் திலீப்குமார், துணை பாதுகாப்பு மேலாளர் நந்தபிரகாஷ், தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.ரமேஷ், பொதுசெயலாளர் எஸ்.சுரேஷ், பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத் துறை தலைவர்கள், தொழிற் சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் கஜேந்திரன் நன்றி கூறினார்.