கிணற்றில் விழுந்த 2 மான்கள் சாவு -ஒரு மான் உயிருடன் மீட்பு
சிவகங்கை அருகே கிணற்றில் விழுந்த 2 மான்கள் இறந்தன. ஒரு மான் உயிருடன் மீட்கப்பட்டது.;
சிவகங்கை
சிவகங்கை அருகே கிணற்றில் விழுந்த 2 மான்கள் இறந்தன. ஒரு மான் உயிருடன் மீட்கப்பட்டது.
கிணற்றில் விழுந்த மான்கள்
சிவகங்கையை அடுத்துள்ள மதகுபட்டி மண்மலை காடுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. இதில் பல மான்கள் இரை தேடியும் தண்ணீருக்காகவும் காட்டை விட்டு ஊருக்குள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த 3 மான்கள் மதகுபட்டி அருகே உள்ள சலுகைபுரம் கிராமப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் தடுமாறி விழுந்துள்ளன. நேற்று காலை நேரத்தில் வயலுக்கு சென்ற விவசாயிகள், கிணற்றுக்குள் இருந்து சத்தம் வந்ததை தொடர்ந்து எட்டி பார்த்து உள்ளனர். கிணற்றுக்குள் மான்கள் இருப்பதை கண்டனர்.
2 மான்கள் சாவு
இது குறித்து அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சிவகங்கை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர்.
கிணற்றுக்குள் இறந்த நிலையில் 2 மான்களையும், உயிருடன் ஒரு மானையும் மீட்டனர்.
இறந்த 2 மான்களை பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட மான் வனப்பகுதிக்குள் துள்ளி குதித்து ஓடியது.